பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோவைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குலுக்கு ஐ.நா, அமெரிக்கா ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப், பிரதமர் சவுகத் அஜீஸ் ஆகியோர் இஸ்லாமாபாத்தில் இருந்து தனித்தனியாக கண்டனம் தெரிவித்துச் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.
அதில் 'இதுபோன்ற தாக்குதல்களால் தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது' என்று கூறியுள்ளனர்.
'' பாகிஸ்தான் மக்கள் தங்களின் பிரதிநிதிகளை ஜனநாயகமுறையில் தேர்வு செய்வதைத் தடுப்பதற்கு தீவிரவாதிகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது'' என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாஷிங்டனில் பேசிய அமெரிக்க தேசியப் பாதுகாப்பு பேரவையின் செய்தித் தொடர்பாளர் கார்டன் ஜான்ட்ரூ, '' குண்டுவெடிப்பில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு அமெரிக்கா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது'' என்றார்.
அடுக்குமுறை மூலம் பயத்தை ஏற்படுத்தி சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு தாக்குதல் நடத்தியவர்களே பொறுப்பு என்று வெளியுறவுத்துறை துணைச் செயலர் டாம் கேசி தெரிவித்தார்.
பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களை நீக்கி ஜனநாயகமான, அமைதியான சமூகத்தை உருவாக்க நினைக்கும் பாகிஸ்தான் மக்களின் முயற்சிகளுக்கு அமெரிக்கா எப்போதும் துணைநிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இத்தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சரியான தகவலைத் தருவதற்குத் தவறிய உளவுத்துறைத் தலைவர் பிரிக் இஜாஷ் ஷாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பெனாசீர் புட்டோ வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பள்ளிகள் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.