பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோவைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 130 பேர் உடல்சிதறி பலியானார்கள். 400 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் பெனாசீர் காயமின்றி உயிர்தப்பினார். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோ 8 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நாடு திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்காண ஆதரவாளர்கள் வரவேற்பளித்தனர்.
நேற்று மாலை முதல் தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கியத் தலைவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரைப் பெனாசீர் சந்தித்தார்.
நள்ளிரவு நெருங்கும் வேளையில் பெனாசீர் தனது ஆதரவாளர்கள் சூழ கராச்சி அருகில் கர்ஷாவில் உள்ள முகமது அலி ஜின்னாவின் நினைவிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரின் குண்டு துளைக்காத காரில் இருந்து 15 அடி தொலைவில் முதல் குண்டு வெடித்தது. சரியாகப் பத்து நிமிடம் கழித்து மேலும் ஒரு குண்டும் வெடித்தது.
இதில் சுமார் 130பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். 400க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் உடனடியாக பெனாசீரை அங்கிருந்து உடனடியாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு அல் கொய்தா, தலிபான் தீவிரவாத இயக்கங்களே காரணமாக இருக்க முடியும். ஏனெனில், பெனாசீர் நாடு திரும்பினால் அவரைக் கொல்வோம் என்று இந்த இயக்கங்கள் அறிவித்திருந்தன என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
முதல்கட்ட விசாரணையில் தற்கொலைப்படை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்தக் குண்டு வெடிப்பிற்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் 20,000 காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் ஏராளமான ஆயுதங்களும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
'வன்முறை ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அதிபர் பர்வேஷ் முஷாரப் கூறுகின்ற நேரத்தில், அவருக்குக் கீழ் இயங்கும் முதன்மை உளவுத்துறையின் தோல்வியைத்தான் இது காட்டுகிறது' என்று பெனாசீர் புட்டோ தெரிவித்துள்ளார்.