சிறிலங்காவில் வடமேற்கு மன்னார் தீவுகளுக்கு அருகில் கடற்படை நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகள் 3 பேர் கொல்லப்பட்டனர் என்றும், மூன்று பேர் படுகாயமடைந்தனர் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 'மன்னாரில் உள்ள விடத்தலித்தீவு பகுதியில் இருந்து வடக்கு பேசாலை நோக்கி அத்துமீறிச் சென்று கொண்டிருந்த சில படகுகளைத் தடுத்து நிறுத்த கடற்படையினர் முயன்றனர்.
அந்தப்பகுதி மீன் பிடித்தல் உள்ளிட்ட எல்லா நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்ட பகுதி என்று எச்சரிக்கப்பட்டது. ஆனால், அதிலிருந்த விடுதலைப் புலிகள் அதைக் கேட்கவில்லை.
மேலும், படகுகளை நெருங்க முயன்றபோது, அதில் இருந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கடற்படையினரும் திருப்பித் தாக்கினர்.
மோதலின் இறுதியில், கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களையும், காயமடைந்த 3 பேரையும் கடலில் விட்டுவிட்டு விடுதலைப் புலிகளின் படகுகள் தப்பிச்சென்று விட்டன'' என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு தொடர்பாக தொலைபேசியில் பேசிய கடற்படை அதிகாரி ஒருவர், ''காயமடைந்தவர்கள் மேல் விசாரணைக்காக மன்னார் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இறந்தவர்களின் அடையாளம் தெரியவில்லை'' என்றார்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.