பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் வகையில் அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
அரசு முறைக்கு எதிரானவர்கள், பயங்கரவாதிகள் ஆகியோரின் கைகளில் அணு ஆயுதங்கள் சிக்கும் அபாயம் அதிகரித்து உள்ளதாக உலகளவில் எச்சரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், அணு ஆயுதங்களை விரும்பாத நாடுகள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளோடு அவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இதுபற்றி ஐ.நாவின் ஆயுத ஒழிப்பு, சர்வதேசப் பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.
அப்போது ''அணு ஆயுதம் இல்லாத உலகம் என்ற குறிக்கோளை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உண்மையான பாரபட்சமற்ற முறையில் அணு ஆயுதங்களை ஒழிப்பதன் மூலம் அதை அடைய முடியும் என்று இந்தியா நம்புகிறது.
அணு ஆயுதமற்ற உலகத்தை உருவாக்குவதில் எல்லா நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
மேலும், அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் தொடர்ந்து நீடித்துவருகிறது. அணு ஆயுதம் இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற நிலையை உறுதிசெய்வதில் இந்தியா பொறுப்புடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.