உலகிலேயே மிகப்பெரிய டைனோசரின் (தாவரம் உண்ணும்) படிமத்தை கண்டுபிடித்துள்ளதாக அர்ஜென்டினா, பிரேசில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஃபியூடலாகோசாரஸ் (Futalognkosaurus) என்று அழைக்கப்படும் இந்த டைனோசர் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்து வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களில் இதுதான் மிகவும் உயரமானதும், பெரியதும் ஆகும். சுமார் 32 மீட்டர் (105அடி) நீளமாகப் படுக்கைவசத்தில் அதன் படிமம் புவியில் பதிந்துள்ளது.
''புவியில் வாழ்ந்த உயிரினங்களில் இதுதான் மிகப்பெரியது என்பதைக் குறிக்கும் வகையில் மபுசே இந்தியர்களின் மொழியில் இருந்து இந்த டைனோசரின் பெயர் தேர்வு செய்யப்பட்டது'' என்று அர்ஜென்டினா பல்கலைக்கழக ஆய்வாளர் ஜோர்கே கால்வோ கூறியுள்ளார்.
அர்ஜென்டினாவில் உள்ள ஆற்றுப் பகுதியில் கடந்த 2000-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இரண்டு எலும்புகள் சிக்கின. அவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்தபோது இந்த டைனோசர் கண்டுபிடிக்கப்பட்டது.
சில எலும்புகள் ஆற்று நீரிலும், வெள்ளத்திலும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அவற்றைத் தேடுவது கடினமான காரியம் ஆகும் என்றும் கால்வோ தெரிவித்தார்.
அப்பகுதியில், ஆதிகாலத்தில் வாழ்ந்த மீன்கள், பாலூட்டிகள் எனப் பல்வேறு உயிரினங்களின் படிமங்களும் கிடைத்துள்ளன. டைனோசர் சாப்பிட்ட இலைகள் அடங்கிய மரங்களும்கூட அதில் உள்ளன.
பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய டைனோசர்கள் பருவநிலை மாற்றம் காரணமாக அழிந்துவிட்டன. தற்போது அவற்றின் படிமங்கள்கூட புவியியல் மாற்றங்களால் சிதைந்து வருகின்றன.
இந்த நிலையில் இப்படியொரு டைனோசர் படிமம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறினர்.