இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய சில ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், தன்னைக் கொல்லத் திட்டமிட்டுள்ளனர் என்று சந்தேகிப்பதாக பெனாசீர் புட்டோ தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோ வருகிற 18-ஆம் தேதி நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளார்.
அப்போது தற்கொலைப்படை உதவியுடன் பெனாசீரைக் கொலை செய்ய தலிபான் தளபதி பைத்துல்லா மசூத் முயற்சிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது.
ஆனால், தனக்கு உண்மையான அச்சுறுத்தல் ராணுவத்தினரிடம் இருந்துதான் வந்துள்ளது என்று பெனாசீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த பெனாசீர், ''நான் பைத்துல்லா மசூத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. அரசிற்குள் இருந்து வருகின்ற அச்சுறுத்தலைக் கண்டுதான் கவலைப்படுகிறேன்'' என்றார்.
மேலும், ''பைத்துல்லா மசூத்தைப் போன்றவர்கள் வெறும் அம்புகள்தான். அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கும் சக்திகள்தான் எனது நாட்டில் தீவிரவாதமும், பயங்கரவாதமும் வளரக் காரணமாகும்.
ஜிகாத்திற்காகபணியாற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் சிலர் உளவுத்துறையிலும், நிர்வாகத்திலும் பணியாற்றி வருகின்றனர்'' என்றும் பெனாசீர் கூறினார்.
பெனாசிரின் குற்றச்சாற்றுகளை பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இருந்தாலும், பெனாசிரின் வருகைக்காக பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவருக்கான குண்டுதுளைக்காத கார்களும் தயாராக உள்ளன.