சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
கொழும்பில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்றிற்குத் தொலைபேசி மூலம் தகவல் தந்த ராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நானயக்கார இதைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ''பொட்டுவில்லில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யாழ் தேசியப் பூங்காவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் மீது நேற்றிரவு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 வீரர்கள் நிகழ்விடத்திலேயே இறந்தனர். ஒரு வீரர் படுகாயமடைந்தார்.
ராணுவம் உடனடியாக விடுதலைப் புலிகள் மீது பதில் தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையில், விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் உடலை எடுத்துவரப் பயன்படும் டிராக்டர் ஒன்று இன்று காலை கண்ணிவெடியில் சிக்கியது. இதில் ஒருவர் இறந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தாக்குதல் நடந்த பகுதிகளில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது '' என்றார்.