நைஜீரியா சென்றுள்ள பிரதமர் மக்மோகன்சிங் இன்று இரவு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைத் தொலைபேசியில் அழைத்துப் பேசவுள்ளார். அப்போது இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் அடுத்த நிலை குறித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2005-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18-ஆம் தேதி கையெழுத்து ஆனது.
இந்த அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகள் தொடர்ந்து எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்தினால் மத்திய அரசிற்கு அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று இடதுசாரிகள் எச்சரித்துள்ளனர்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான ஹைட் சட்டத்தினால், இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், நாட்டின் நலன் கருதியே ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே ஒப்பந்தத்தைக் கைவிடலாமா என்று மத்திய அரசு அலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, டெல்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவரும் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின.
அதேநேரத்தில், அணுசக்தி ஒப்பந்தத்தைத் தியாகம் செய்வதால் பெரிய இழப்பு ஏற்பட்டுவிடாது என்று பிரதமர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
ஆனால், அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது எழுந்துள்ள விமர்சனங்களால் இடைத் தேர்தலைச் சந்திப்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நோக்கமல்ல என்று சோனியா காந்தி கூறினார்.
இதற்கிடையில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகளுக்கு எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஐ.மு.கூ- இடதுசாரிகள் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 22 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 5 நாள் அரசு முறைப் பயணமாக நைஜீரியா சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை தொலைபேசியில் அழைத்துப் பேசவுள்ளார்.