சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவகாரங்களில் காவல்துறை அதிகாரியைப் போல ஐ.நா. செயல்பட வேண்டாம் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தும் வகையில், ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூய்ஸ் ஹார்பர் சிறிலங்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது, சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாக்கும் வகையில் நிரந்தரக் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று லூய்ஸ் ஆர்பர் தெரிவித்தார்.
இந்நிலையில், அதிபர் மகிந்த ராஜபக்சவை கடந்த வெள்ளிக்கிழமை லூய்ஸ் ஆர்பர் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது உடனிருந்த அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச பேசுகையில்,'' சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் பிரச்சனை ஏற்பட்டபோது உணவு தருவது போன்ற வகையில் இந்தியா உதவியது. அவர்கள் காவல்துறை அதிகாரி போலச் செயல்படவில்லை. அதேபோலத்தான் ஐக்கிய நாடுகள் சபையும் சிறிலங்காவிற்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இந்நாட்டின் மனித உரிமை தொடர்பான விவகாரங்களில் காவல்துறையினர் போலச் செயல்படுவதில் இருந்து ஐ.நா. விலகி நிற்க வேண்டும்'' என்றார்.