வானிலை மாற்றம் : சர்வதேச அமைப்பிற்கு அமைதிக்கான நோபல்!
, வெள்ளி, 12 அக்டோபர் 2007 (18:21 IST)
புவி வெப்பமடைதலால் வானிலையில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் இயற்கைச் சீற்றங்களைத் தடுக்க பணியாற்றிவரும் வானிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசுகள் குழு எனும் அமைப்பும், இதே நோக்கத்தை வலியுறுத்தி பாடுபட்டுவரும் ஆல்பர்ட் ஆர்னால்ட் கோரே ஜூனியர் என்பவருக்கும் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்!
ஐ.பி.சி.சி. என்றழைக்கப்படும் வானிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசுகளின் குழு (Inter Governmental Panel on Climate Change - IPCC) எனும் அமைப்பு உலக வானியல் அமைப்பு மற்றும் ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் ஆகியன இணைந்து 1982 ஆம் ஆண்டு உருவாக்கின. இந்த அமைப்பு, புவி வெப்பமடைதலால் வானிலையில் ஏற்படும் மாற்றம் எப்படிப்பட்ட அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது என்பதனை ஆய்வுகளின் மூலம் சர்வதேச அரசுகளின் கவனத்திற்கு கொண்டு வந்தது மட்டுமின்றி, அதனைத் தடுத்து புவியைக் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் திட்டமிட்டு அதனை சர்வதேச அமைப்புகளிடம் அளித்து நிறைவேற்றிட வலியுறுத்தி வருகிறது.
இந்த அமைப்பின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ராஜேந்திரா கே. பச்செளரி என்பவர் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஜி-8 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள், ஐ.பி.சி.சி.-யின் திட்டத்தை ஏற்று அதனை செயல்படுத்த ஒப்புக்கொண்டன. இந்த அமைப்பின் செயல்பாடு மானுடத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த மாபெரும் இயற்கை பேரழிவை தடுத்து நிறுத்தியுள்ளது என்று கூறி அதனை அமைதிக்கான நோபல் பரிசிற்கு தேர்வு செய்துள்ளதாக நோபல் குழு அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், ஆல்பர்ட் ஆர்னால்ட் கோரே ஜூனியர் பல்லாண்டுகளாக சுற்றுச்சூழலை காப்பற்றுவதையே கொள்கையாகக் கொண்டு ஓர் அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறார். சுற்றுச் சூழலை காக்க வேண்டும் என்கின்ற உறுதி, வானிலை மாற்றத்தை எதிரான உறுதியுடன் கூடிய போராட்டம், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த படங்கள் வாயிலாகவும், புத்தகங்கள் வாயிலாகவும் அரசியலின் மூலமும் பெரும்பங்காற்றினார். அவருடைய அந்த ஈடிணையற்ற பணிக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைதிக்கான நோபல் பரிசிற்கு தேர்வு செய்துள்ளதாக நோபல் குழு அறிவித்துள்ளது.