ஐ.நா. அவையின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூய்ஸ் ஆர்பரைச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிறிலங்காவில் 86 தமிழ்க் கைதிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 42 பேர் மயக்கடைந்தனர்.
சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூய்ஸ் ஆர்பர் சிறிலங்கா வந்துள்ளார்.
அவரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பு வெலிக்கடைச் சிறையில் உள்ள தமிழ்க் கைதிகள் 86பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
கடந்த 10ஆம் தேதி தொடங்கிய இப்போராட்டம் இன்று மூன்றாம் நாளாக நடந்து வருகிறது. இதுவரை 42பேர் மயக்கமடைந்துள்ளனர். இதில் பலர் காய்ச்சல், கண்வலி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலையைச் சேர்ந்த முத்துவேல் சிறீஸ்கந்தராஜா , அம்பாறை திருக்கோவிலைச் சேர்ந்த மகாலிங்கம் சுதாகரன் ஆகியோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று உடனுள்ள கைதிகள் தெரிவித்துள்ளனர்.