பிரேசிலில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சாலை விபத்துகளில் 28 பேர் இறந்தனர். மேலும் 90 பேர் படுகாயமடைந்தனர்.
பிரேசிலின் சான்டா கேட்டரீனா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
வளைவு ஒன்றில் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியை முந்துவதற்கு ஓட்டுநர் முயற்சித்தார். அப்போது எதிரில் 20 பயணிகளுடன் வந்த பேருந்தின் மீது லாரி வேகமாக மோதியது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உட்பட 7 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். மேலும் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை பாதுகாப்புப் படையினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
எல்லாம் முடிந்தது என்று நினைத்தபோது, சுமார் 90 நிமிடங்களுக்குப் பிறகு அந்த வழியாக வந்த மற்றோரு லாரி மீட்புப்படையினர், பொதுமக்கள் மீது ஏறியது.
இதில் 1 காவலர், 3 தீயணைப்பு வீரர்கள், 17 பொதுமக்கள் என 21 பேர் உயிரிழந்தனர்.
''இரண்டாவது விபத்திற்குக் காரணமான லாரியில் பிரேக் முற்றிலும் செயலிழந்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம்'' என்று காவல்துறை அதிகாரி ஆண்ட்ரியன் ஃபியாமோன்சினி கூறியுள்ளார்.
லாரியின் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் காவல்துறை பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் காயமடைந்த பலர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.