மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இரண்டு நாள் பயணமாக இன்று ரஷ்யா செல்கிறார்.
இப்பயணத்தின் போது வணிகம், எரிசக்தி, சுற்றுலா, தொழில்நுட்பம் போன்ற முக்கியத்துறைகளில் ரஷ்யாவுடன் இந்தியாவிற்கு உள்ள உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு தலைவர்களுடன் பிராணாப் பேச்சு நடத்துவார் என்று கருதப்படுகிறது.
மேலும், மாஸ்கோவில் நடைபெறவுள்ள இந்திய ரஷ்ய அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் 13வது கூட்டத்தில் பிரணாப் பங்கேற்று உரையாற்றுகிறார்.
ஆணையத்தில் 5 குழுக்கள் உள்ளன. அவை வணிகம், பொருளாதாரம், சுற்றுலா, கலாச்சாரம், எரிசக்தி, சுரங்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்திற்காக இயங்குகின்றன. இந்தக் குழுக்களின் செயல்பாடு பற்றி இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
ரஷ்யாவின் சார்பில் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் அலெக்சாண்டர் சுக்கோவ் பங்கேற்கிறார்.
இருதரப்பு உறவுகள் பற்றி மட்டுமல்ல, மண்டலப் பிரச்சனைகள் பற்றியும் பிரணாப் விரிவாக விவாதம் நடத்துவார் என்று வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி நவ்தேஜ் சார்ணா தெரிவித்துள்ளார்.