சிறிலங்கா வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூய்ஸ் ஆர்பர் இன்று சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்கவையும், ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவையும் சந்தித்தார்.
மகிந்த சமரசிங்கவை இன்று காலை 10 மணியளவில் அவரது அமைச்சகத்தில் லூய்ஸ் ஆர்பர் சந்தித்தார். இந்த சந்திப்பில் சிறிலங்காவில் நிகழும் மனித உரிமை மீறல்கள் குறித்து மகிந்த சமரசிங்கவிடம் லூய்ஸ் ஆர்பர் கேட்டதாகத் தெரிகிறது.
இதற்கு விளக்கமளித்த அமைச்சர் மகிந்த சமரசிங்க, மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறியுள்ளார்.
ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கவை இன்று காலை 11 மணியளவில் ஜே.வி.பி. கட்சியின் தலைமையகத்தில் லூய்ஸ் ஆர்பர் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உடனிருந்ததாக ஜே.வி.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ். குடாநாட்டுக்கு நாளை மறுநாள் செல்லும் லூய்ஸ் ஆர்பர், அங்கு மாவட்ட செயலகத்தில் அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளையும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசுகிறார்.
அங்கும் காணாமல் போனவர்களின் உறவினர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை லூய்ஸ் ஆர்பர் கேட்டறியவுள்ளார். இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள கைதிகளை லூய்ஸ் ஆர்பர் சந்திக்க உள்ளார்.
வருகிற 13 ஆம் தேதி தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்புவதற்கு முன்னர் அன்று மாலை கொழும்பில் செய்தியாளர்களை லூய்ஸ் ஆர்பர் சந்தித்துப் பேசுகிறார்.