2007 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெர்ஹார்ட் எர்ட் பெற்றுள்ளார்.
செயற்கை உரம், எரிபொருள் மின்கலம் உள்ளிட்டவை தொடர்பாக வேதியியல் துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
வேதியியல் துறையில் ஒரு பிரிவான சர்ஃபேஸ் கெமிஸ்ட்ரி (Surface Chemistry ) யில் சாதனை படைக்கும் ஆய்வுகளை ஜெர்ஹார்ட் எர்ட் மேற்கொண்டுள்ளார்.
1960 ஆம் ஆண்டு உருவான நவீன சர்ஃபேஸ் கெமிஸ்ட்ரியில் இவரின் பங்கு மகத்தானது என்று நோபல் குழு தெரிவித்துள்ளது. தனிமப் பரப்பில் நைட்ரஜன் புரியும் வினைகளை ஆய்வு செய்தார். அது எப்படி வினை புரிகிறது என்றும் அதன் பயனை எப்படி எளிய முறையில் பெற்றுப் பயன்படுத்துவது என்றும் ஜெர்ஹார்ட் எர்ட் விரிவாக சோதனைகளை நடத்தினார்.
குறிப்பாக காற்றிலிருக்கும் நைட்ரஜனைப் பயன்படுத்தி அதிக அளவில் செயற்கை உரம் தயாரிக்கும் வழிமுறைகளை ஆய்வு செய்தார். அதில் பெருமளவு வெற்றியும் பெற்றார்.
மேலும், தனிமப் பரப்பில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் எப்படி சுற்றுச் சூழலைப் பாதிக்கிறது என்று அறிந்து, அதைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார்.
இவரின் கண்டுபிடிப்புகள் செமி கண்டக்டர் போன்ற மின்னணுப் பொருட்கள் தயாரிப்புத் துறையில் அடிப்படையாகப் பயன்படுகிறது. எனவே கணினி போன்ற மின்னணு இயந்திர உற்பத்தியில் இவரைப் புறக்கணிக்க முடியாது.
1936 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த ஜெர்ஹார்ட் எர்ட் 1965 ஆம் ஆண்டு இயற்பியல் வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்றார். தற்போது பெர்லினில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
இவருக்கு நோபல் பரிசுத் தொகையாக 10 மில்லியன் சுவிடிஸ் குனார் (1.5 மில்லியன் டாலர்) வழங்கப்படும்.