இரஷ்யாவில் 49 பேரைக் கொன்ற தொடர் கொலையாளி ஒருவன் தனது முதல் கொலை அனுபவம் முதல் காதல் அனுபவத்தைப் போன்றது என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளான்.
இரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு தெற்கில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணி புரிந்தவன் பிட்சுஸ்கின். இவன் கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டுவரை சுமார் 49 பேரைக் கொலை செய்துள்ளான். 3 பேரைக் கொல்ல முயற்சித்துள்ளான்.
இந்தத் தொடர் கொலையாளியின் கொலைத் தந்திரம் மிகவும் வியப்பானது. தன்னை சதுரங்கப் பலகையில் உள்ள ராஜாவாகக் கருதிக் கொண்டு மற்ற 63 கட்டங்களையும் எதிரிகளாக நினைத்துக் கொலை செய்து வந்துள்ளான்.
பிட்சுஸ்கின் மீதான வழக்குகள் மாஸ்கோ நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
''நான் முதன்முதலில் காதலில் விழுந்ததைப் போன்ற அனுபவத்தை எனது முதல் கொலை தந்தது. அது மறக்க முடியாதது. எனவே கடந்த 14 ஆண்டுகளாக எனது மனநிறைவிற்காகக் கொலை செய்தேன்'' என்று நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது பிட்சுஸ்கின் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், ''நான் 63 பேரைக் கொல்ல வேண்டும். என்னுடைய சதுரங்கத்தில் என் இலக்கை நான் இன்னும் அடையவில்லை. நான் 52 நிகழ்வுகளில்தான் குற்றம் சாற்றப்பட்டுள்ளேன். மீதமுள்ள 11-ஐயும் மறக்கமுடியாது என்று நினைக்கிறேன்'' என்றும் அவன் தெரிவித்தான்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கில் பட்டியிலடப்பட்ட இறந்தவர்கள் பற்றித் தெரிவிக்குமாறு கூறினார்.
அதற்கு அவன், ''அப்படியானால் 63-ஐப் பற்றி உங்களுக்குக் கவலையில்லையா? உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு வந்தாலும் கூடத் தேவையில்லையா?'' என்று கேள்வி எழுப்பினான்.
''நான் 1992ஆம் ஆண்டு கொலை செய்யத் தொடங்கினேன். முதன் முதலில் என்னுடைய சக மாணவன் ஓடிசுக்கின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து கிணற்றில் வீசினேன்.
முதலில் நாங்கள் இருவரும் சேர்ந்து கொலைகளைச் செய்யத் திட்டமிட்டோம். ஆனால் பிறகு அவனால் இதில் தொடர்ந்து ஈடுபட முடியாது என்று தெரிந்தது. எனவே அவனை ஒதுக்கிவிட்டேன்.
அவனுக்கு கொலை ஒரு விளையாட்டு. ஆனால் எனக்கு அது விளையாட்டல்ல. எல்லோரும் கொலை செய்வதற்குத் தகுதியானவர்கள் அல்ல. எனக்கு இது புரிந்தவுடன் அவனைக் கொல்ல முடிவு செய்தேன்'' என்று பிட்சுஸ்கின் நீதிமன்றத்தில் தெரிவித்தான்.
மேலும், எல்லாக் குற்றங்களையும் அவன் ஒப்புக்கொண்டான்.
பிட்சுஸ்கினை அவன் கடைசிக் கொலை செய்து 11 நாட்களுக்குப் பிறகு 2006ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர்.