பிரிட்டனில் வசிக்கும் 10 முதல் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில் ஏறக்குறைய அனைவருமே குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஹோவர்ட் லீக் என்ற நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில், பிரிட்டனில் வசிக்கும் 10 முதல் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில் 95 விழுக்காட்டினர் ஆண்டிற்கு ஒருமுறையாவது மற்றவர்கள் செய்யும் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
ஆய்வுக்கு உட்பட்ட 3000 சிறுவர்களில் 3 பங்கினர் அடிதடியிலும், 2 பங்கினர் திருட்டிலும், மீதிப்பேர் சொத்துகளைச் சேதப்படுத்துதல், கெட்டவார்த்தை பேசுதல் போன்ற மற்றவர்களின் குற்றங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கார்டியன் இதழ் கூறியுள்ளது.
இதில் பெரும்பாலான பாதிப்புகள் பள்ளிகள், விளையாட்டுத் திடல்களில் நடைபெற்றுள்ளது. இதனால் குழந்தைகள் குற்றங்களைக் கண்டு பயப்படுகின்றனர். விளையாடுவதற்குப் பாதுகாப்பான இடங்களைத் தேடுகின்றனர்.
''மற்ற இளைஞர்கள் செய்யும் குற்றங்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் குழந்தைகளைப் பெரியவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். ஏனேனில் குழந்தைகள் தாங்கள் பாதிக்கப்பட்ட விவரத்தை மிகவும் அரிதாகத்தான் வெளிப்படுத்துகிறார்கள்'' என்று ஹோவர்ட் லீக் நிறுவனத்தின் இயக்குநர் ஃபிரான்செஸ் குரூக் கூறியுளளார்.
பெரியவர்கள் தங்களைக் கவனிக்க மாட்டார்கள் என்று நினைப்பதன் காரணமான குழந்தைகள் தங்களின் பிரச்சனைகளைத் தெரிவிப்பதில்லை. மேலும் இக்குற்றங்கள் கவனிக்கத் தேவையற்ற அளவு சிறியதென்று கருதப்படுகிறது.
ஆனால் அரசிடம் உள்ள தகவல்களின்படி சிறுவர் மீதான குற்றங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளன.
2003 ஆம் ஆண்டின் அரசுக் கணக்கெடுப்பின்படி 10 முதல் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 35 விழுக்காட்டினர்தான் குற்றத்தால் பாதிக்கப்பட்டனர்.