அணுசக்தி ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு உதவி செய்வோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கான காலத்தை இந்தியாவே முடிவு செய்யலாம் என்றும் அந்நாடு கூறியுள்ளது.
கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளைத் தொடங்குவதற்காக இந்தியா தன்னை அணுகவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் முகமது எல்பராடி கூறியுள்ளது பற்றி அமெரிக்கச் செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கார்மக்கிடம் வாசிங்டன்னில் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், ''இந்த ஒப்பந்தத்தின் எல்லாப் பகுதிகளையும் இறுதிசெய்வதற்காக இன்னும் பலவிதமான படிகளைத் தாண்டவேண்டியுள்ளது. அதில் சில படிகளை இந்தியா முழுமையாக முன்நின்று எடுக்கவேண்டிய நிலை உள்ளது.
அதற்கான முயற்சிகளில் அவர்களுக்கு நாங்கள் உதவி செய்வோம். அணுசக்தி ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கான காலநிலையை இந்தியாவே முடிவு செய்யட்டும். '' என்றார்.
மேலும், இந்தியாவுடன் அணுசக்தி வணிகம் மேற்கொள்வதற்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் கொண்டுவந்த தீர்மானத்தையும் ஜார்ஜ் புஷ் நிர்வாகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
''தீர்மானம் கொண்டுவந்த உறுப்பினர்களைத் தவிர மற்ற உறுப்பினர்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முழுஆதரவு தெரிவித்துள்ளனர்.
சில முக்கியமான விவகாரங்களில் சில முக்கியமான கருத்துகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்புகின்றனர். அவற்றை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.
அதேநேரத்தில் இந்த அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க அரசிற்கு மட்டும் முக்கியமானதல்ல, உலகம் முழுவதும் அணு ஆயுதப் பரவலைத் தடுக்க அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளுக்கும் அவசியம் என்று மீண்டும் அரசு உறுதியளிக்கிறது'' என்றார்.