ஐக்கியநாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாச்சார நிறுவனத்தில் (யுனஸ்கோ) 22ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூர் மீண்டும் இணைந்தது.
யுனஸ்கோவில் 193 ஆவது உறுப்பினராக இணைவதற்கான உடன்பாடு லண்டனில் சமர்ப்பிக்கப்பட்டது. சிங்கப்பூரின் வருகையை யுனஸ்கோ நிறுவனத்தின் இயக்குநர் கூச்சிரோ மத்சூரா வரவேற்றார்.
"பொதுத்தன்மைதான் யுனஸ்கோவின் வலிமைக்கு முக்கிய ஆதாரம். அதிகரித்துவரும் சிக்கலான சூழ்நிலைகளில், உலகளவில் எழும் கருத்துகளை வெளிக்கோண்டு வர இங்கு வழியுள்ளது." என்று மத்சூரா கூறினார்.
மேலும், சிங்கப்பூர் மீண்டும் இணைந்ததில் யுனஸ்கோவின் எல்லா உறுப்பினர்களும் பெருமையடைகின்றனர். யுனஸ்கோவின் எல்லாத் தளங்களிலும் சிங்கப்பூர் தனது கருத்துக்களை தெரிவிக்கலாம், அவற்றை நாம் பகிர்ந்து கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் யுனஸ்கோ பொது அவையின் 34ஆவது மாநாடு வருகிற 16ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை நடக்கிறது. அதில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு சிங்கப்பூர் கல்வியமைச்சர் கான் கிம் யோங் தலைமையேற்கிறார்.