போர் நடைபெறும் ஒரு நாட்டில் மனித உரிமை மீறல்கள் என்பது தவிர்க்க முடியாதது என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித சேனரத்ன கூறியதாவது :
வல்லரசு நாடுகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கவலைப்படுவது இல்லை. போர் சூழல் நிலவுகின்ற ஒரு வளரும் நாட்டில் ஒப்பீட்டளவில் அரிதாக நிகழ்கின்ற மனித உரிமை மீறல்களை அந்த அமைப்புக்கள் ஏன் பூதாகரமாகப் பார்க்கின்றன. இதுதான் அவர்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேசக் கொள்கையா?
ஈராக்கின் மீது அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்புக் காரணமாக 6,000 ஈராக்கியப் பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர். காஷ்மீர் எல்லைப் போரின் போது 10 ஆயிரம் மக்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைப் பற்றி எந்த மனித உரிமைகள் அமைப்பும் இதுவரை குரல் கொடுக்கவில்லை.
சிறிலங்காவில் இதுவரை சுமார் 1,100 மனித உரிமை மீறல் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. போர் நடைபெறும் ஒரு நாட்டில் இந்த மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாத ஒன்று.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர்களான ஆர்.பிரேமதாச, சந்திரிகா, பண்டாரநாயக்க ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும் போர் இல்லாத நிலையிலும் கூட இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் பல நடந்தன. அவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் இருக்கவில்லை.
ஆனால் மகிந்த ராஜபக்ச, அவற்றுக்குப் பரிகாரம் காண்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதில் ஓரு அங்கம்தான் மகிந்தவினால் நியமிக்கப்பட்ட ஆட்கடத்தல், கப்பம் பெறுதல் மற்றும் படுகொலைகள் குறித்து ஆராய்வதற்கான குழுவாகும்.
கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு சுதந்திரமாக இயங்கி வருகின்றது. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட பின்னர் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் மிகவும் குறைந்துள்ளன என்றார் அவர்.