சிறிலங்கா அரசின் எதிர்ப்பையும் மீறி இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினால் கடத்தப்பட்டு காணாமல் போனோரின் குடும்பங்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூய்ஸ் ஆர்பர் சந்திக்க உள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்பு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள கொழும்பு ஐ.நா. அலுவலகம், எதிர்ப்பையும் மீறி இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
கொழும்பில் வருகிற வியாழக்கிழமை பிற்பகல் இச்சந்திப்பு நடைபெற உள்ளது. யாழ்ப்பாணத்திலும் பொதுமக்களை லூய்ஸ் ஆர்பர் சந்தித்துப் பேச உள்ளார்.
ஆனால் "லூய்ஸ் ஆர்பரின் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக இறுதி அறிக்கையை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர் யாழ்ப்பாணம் செல்கிறார்" என்று சிறிலங்காவின் மனித உரிமை விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துளார்.
மேலும் கடத்தப்பட்டோரின் குடும்பங்களை அவர் சந்திப்பதற்கான தேதி ஏதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றும், அவர் சில பெண்கள் அமைப்புகளைத்தான் சந்திக்க உள்ளார் என்றும் அவர் கூறினார்.