மட்டக்களப்பு ஆலங்குளத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளைக் கட்ட சிறிலங்கா இராணுவம் தடை விதித்ததற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், வாழைச்சேனை- கொழும்பு வீதியில் வாகரைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் நாவலடி அமைந்துள்ளது. அங்கு அரசுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன. அண்மையில் வாழைச்சேனை மற்றும் ஒட்டமாவடியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அந்த நிலங்களை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டினார்கள்.
சுனாமியாலும் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலாலும் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்கள் நாவலடிக்கு அருகில் உள்ள ஆலங்குளத்தில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாவலடியில் வீடுகளை கட்டிக்கொடுக்க அமெரிக்கன் மிசன் அமைப்பு முன்வந்தது.
ஆனால் சிறிலங்கா இராணுவம் வீடுகள் கட்டுவதைத் தடுத்தது. மேலும் கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு மிரட்டல் விடுத்ததுடன் கட்டுமானப் பொருட்களை அகற்றுமாறும் உத்தரவிட்டது.
வாகரை பிரதேசத்துக்குட்பட்ட நாவலடியானது பாரம்பரிய தமிழ்க் கிராமமாகும். திட்டமிட்ட வகையில் அக்கிராமத்தை ஆக்கிரமிக்கும்போது அதனை சிறிலங்கா இராணுவம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. எனவே இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கான வீடுகள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை அதிபர் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மட்டக்களப்பிலிருந்து வடக்குப் பகுதியில் 36 கிலோ மீட்டர் தொலைவில் நாவலடி உள்ளது.