சிறிலங்கா இராணுவத்தை விமர்சிப்பவர்கள் துரோகிகளாக கருதப்படுவர் என்று சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மைய இயக்குநர் ஜெனரல் லக்ஸ்மன் ஹலுகலெ கூறியுள்ளதாவது :
மக்களின் பிரச்சனைகளை திசை திருப்பவே சில வாரங்களுக்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்களை மூழ்கடித்துவிட்டதாக சிறிலங்கா கடற்படையினர் கூறுகின்றனர் என்று சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் அது உண்மை அல்ல.
இந்த நாட்டுக்காக மிகப்பெரிய துணிச்சலோடு அக்கப்பல்கள் அழிக்கப்பட்டன. எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ அல்லது தனி நபருக்கோ உதவுவதற்காக அச்செயல் நடைபெறவில்லை. தயவு செய்து அதை அரசியலுடன் கலக்காதீர்.
அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, கடற்படை தளபதி வசந்த கரன்னகொட ஆகியோரின் தலைமையில்தான் கடற்படை இதனைச் செய்தது. பாதுகாப்பு படையினர் பற்றி செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் அவர்களின் செயல்பாடுகளை சீர்குலைக்காமல் இருக்க வேண்டும். பாதுகாப்பு படையினரை விமர்சிக்கும் ஒருவரை நாங்கள் தேசத் துரோகிகளாகத்தான் கருதுவோம் என்றார் அவர்.