கடந்த மூன்று மாதங்களாக உலகம் முழுவதும் உணவு தானிய தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள விலையேற்றம் ஏழை நாடுகளை நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது என்று ஐ.நா.வின் உணவு முகவாண்மை அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வழக்கத்தைவிட மிக அதிகமாக இருப்புக் குறைவு ஏற்பட்டுள்ளது என்றும், தேவை மிகவும் அதிகரித்துள்ளது என்றும் ஐ.நா.வின் உலக உணவு மற்றும் வேளாண் கழகம் (FAO) அண்மையில் வெளியிட்ட உணவு நிலையறிக்கை தெரிவித்துள்ளது.
உலகளவில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால் கடந்த ஜூன் மாதம் முதல் கோதுமை விலை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. இதனால் தெற்காசியாவில் உள்ள சிறிய நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
தானியங்களின் கையிருப்பு, குறிப்பாக கோதுமை இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது என்று ஐ.நா. உணவுக் கழகத்தின் தகவல் மற்றும் முன்னெச்சரிக்கை மையத்தின் நிர்வாகி பால் ரேசியோன்செர் கூறியுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளைவிட இந்த ஆண்டு கோதுமை கையிருப்பு வெகுவாகக் குறைந்து ஒரு வரலாற்று முத்திரை பதிக்கப்போகிறது என்கிறார் அவர்.
உயிரி எரிபொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள மூலப்பொருள் தட்டுப்பாட்டின் காரணமாக சோளத்தின் விலை ஏறியுள்ளது. எனவே வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாட்டு விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆனால் சோளத்தை நம்பியிள்ள தென் ஆப்பிரிக்க நாடுகளும், மற்ற ஏழை நாடுகளும் நெருக்கடியில் சிக்கிவிட்டன.
தானியங்கள் தட்டுப்பாட்டால் உணவு விலை ஏறியுள்ளது. ஏழை மக்களின் உணவான ரொட்டி, பிஸ்கட் போன்றவை அரிய பொருட்களாக மாறுகின்றன. குறைந்த வருமானமுள்ள மக்களை உடைய ஏழை நாடுகளில் சமூகப் பதற்றம் உருவாகிறது.
அதிக விலை கொடுத்து தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஏழை நாடுகள் தள்ளப்படுகின்றன. இதனால் அந்நாடுகள் வளர்ந்த நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
2007-08 ஆம் ஆண்டில் 280 கோடி டாலர் அளவிற்கு ஏழை நாடுகளின் தானிய இறக்குமதி இருந்தது. உள்நாட்டு தானிய உற்பத்தி குறைவால் இறக்குமதி 14 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதே காலத்தில் வளரும் நாடுகள் 520 கோடி டாலர் அளவிற்கு தானியங்களை இறக்குமதி செய்துள்ளன.