சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள மாளிகாவத்தைப் பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிகழ்வு நேற்று மதியம் 2.45 மணியளவில் நடந்தது.
காயமடைந்த இரு புலனாய்வுப் பிரிவு அலுவலர்களும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஜித் வீதியில் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, அந்த இடத்திற்கு வந்த நபர் ஒருவர் இவர்களை கைத்துப்பாக்கியினால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் ஒருவருக்கு கழுத்திலும், மற்றொருவருக்கு காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. கழுத்தில் காயமடைந்தவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
நிகழ்விடத்திற்கு விரைந்த படையினரும், காவல்துறையினரும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருந்தாலும் யாரும் கைது செய்யப்படவில்லை.