ஐஸ்லாந்து வெளிவிவகார அமைச்சகத்தின் பிரதிநிதியை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றது தொடர்பாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று சிறிலங்காவின் அமைச்சரும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கேகலிய ரம்புக்வெல கூறியதாவது :
ஐஸ்லாந்தின் அதிகாரி ஒப்புதல் இல்லாத பயணம் ஒன்றை வடபகுதிக்கு மேற்கொண்டது குறித்து ஐஸ்லாந்து அரசிடம் சிறிலங்கா அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. சுற்றுலா விசாவில்தான் அந்த அதிகாரி வந்துள்ளார். அதைப் பயன்படுத்தி போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருடன் சேர்ந்து சுதந்திரமாக கிளிநொச்சிக்கு சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்தித்துப் பேசியுள்ளார்.
அமைதி முயற்சிகள், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் விவாதிப்பதற்கான உரிய வழிமுறைகளை மீறி ஐஸ்லாந்து அதிகாரி சென்றுள்ளார். அவரை சிறிலங்கா அரசு அழைக்கவும் இல்லை, அவரை அங்கீகரிக்கவும் இல்லை.
இதற்குக் காரணமாக இருந்த கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி மன்னிப்புக் கேட்டுள்ளார். ஆனால் இதுபோலத் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மீறப்படுமானால் பொறுத்துக்கொள்ள முடியாது. நெருக்கமான இருதரப்பு உறவுள்ள இரண்டு சுதந்திர நாடுகள் என்ற வகையில் மன்னிப்பு கோருவதும் அதனை ஏற்பதும் புரிந்துகொள்ளக் கூடியது. ஆனால் கண்காணிப்புக் குழுவின் நிலைதான் மன்னிக்க முடியாதது.
எத்தனை பார்வையாளர்களை அரசின் அனுமதியின்றி கண்காணிப்புக் குழுவினர் இப்படி அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என நியாயமாக நாம் சந்தேகித்து நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டால் அவர்கள் எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டும். மேலும் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் வாகனங்களை வடபகுதியில் எந்த ஒரு சோதனைச் சாவடியிலும் நிறுத்தி சோதனையிடுவோம் என்றார் கேகலிய.