சிறிலங்காவில் தொடரும் மனித உரிமை மீறல்கள் கவலை அளிப்பதாக அமெரிக்க அரசின் செயலாளர் நிக்கோலஸ் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகோல்லகாம நேற்று நிக்கோலஸ் பர்ன்ஸை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பு குறித்து அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சிறிலங்காவில் மனித உரிமைகளின் நிலை குறித்து ரோகிதவும் பர்ன்சும் 45 நிமிடம் ஆலோசனை நடத்தினர்.
கொழும்பில் கடத்தல்கள் தற்போது குறைந்துள்ளதை பர்ன்ஸ் வரவேற்றார். இருப்பினும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நிகழ்வதாகவும் ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல்களை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை தண்டிக்க சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடத்தப்படும் நிகழ்வுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும் நிக்கோலஸ் பர்ன்ஸ் வலியுறுத்தினார்.
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஏற்கக் கூடிய வகையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பாக சிறிலங்கா அரசு இன்னும் விவாதிக்க வேண்டும் என்றும் ரோகிதவிடம் நிக்கோலஸ் பர்ன்ஸ் வலியுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.