Publish Date: Thu, 04 Oct 2007 (14:11 IST)
Updated Date: Thu, 04 Oct 2007 (14:10 IST)
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனுடன் ஐஸ்லாந்து நாட்டு அயல் விவகார அமைச்சகத்தின் பிரதிநிதி ப்ஜார்னி வெஸ்ட்மானின் திடீர் சந்திப்பு சிறிலங்கா அரசுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மையப் பணியகத்தில் சு.ப.தமிழ்ச்செல்வனை செவ்வாய்க்கிழமை வெஸ்ட்மான் சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த சிறிலங்கா அயல் விவகார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர், "சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஐஸ்லாந்து பிரதிநிதி அழைக்கப்படவில்லை. வழக்கமாகப் பின்பற்றக் கூடிய நடைமுறைகளுக்கு இடையில் அவர் வரவும் இல்லை" என்று கூறியுள்ளார்.
அமைதிப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதற்காக விடுதலைப் புலிகளை சந்தித்துப் பேச நார்வே தரப்பால் வெஸ்ட்மான் அனுப்பபட்டு இருக்கலாம் என்றும் சிறிலங்கா போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் அவரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கக்கூடும் என்றும் சிறிலங்கா அரசுத் தரப்பு கருதுகிறது.
இருப்பினும் இது தொடர்பாக நார்வே தூதரகம் மற்றும் கண்காணிப்புக் குழுவின் கருத்துகள் எதுவும் வெளியாகவில்லை.