இந்தியா- அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம், தற்போதுள்ள அணு ஆயுதமற்ற நிலை மற்றும் அணு ஆயுதப் பரவல் தடைக்கு ஆதரவான ஒருமித்த கருத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது.
ஐ.நா பொது அவையில் பேசிய பாகிஸ்தான் அயலுறவுத் துறைச் செயலாளர் ரியாஸ் முகமது கான், இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தெற்காசிய மண்டலத்தில் ஒரு புதிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
அணுசக்தி தொழில்நுட்ப வழங்கல் நாடுகள் (என் எஸ் ஜி) பட்டியலில் உறுப்பினராக வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை குறித்தும் அவர் பேசினார்.
அப்போது, இந்தியாவின் கோரிக்கைக்கு குறிப்பிட்ட வகையிலோ அல்லது ஒருதலைப்பட்சமாகவோ என்எஸ்ஜி அளிக்கும் ஒப்புதல், அணு ஆயுதப் பரவல் தடை தொடர்பாக தற்போதுள்ள ஒருமித்த கருத்துகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
சுமார் 45 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட என்எஸ்ஜி-யில் சேர்க்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அதேநேரத்தில், சர்வதேசக் கண்காணிப்பு விதிகளுக்கு உட்பட்டு அணுசக்தியை உருவாக்கிப் பெருக்குவதில் பாகிஸ்தான் மிகவும் ஆர்வமாக உள்ளது என்றும் ரியாஸ் முகமது கான் தெரிவித்துள்ளார்.