இந்தோனேசியாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை அங்குள்ள லியாஸ் மாவட்டத்தில் கடலுக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் உருவானது. ரிக்டர் அளவில் 6.4 புள்ளி பதிவானது.
இந்த நில நடுக்கத்தால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடலோர பகுதியில் உள்ளவர்கள் அச்சத்தில் அலறி அடித்துக் கொண்டு மேடான பகுதிக்கு ஓடினார்கள்.
இந்த நில நடுக்கத்தால் சில வீடுகள் இடிந்து விழுந்தன. சேத விவரம் பற்றியும் சுனாமி ஏற்பட்டதா என்பது குறித்தும் இன்னும் உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை. நிலநடுக்கத்துக்கு பிந்தைய அதிர்வுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
ஏற்கனவே இதே பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் 25 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.