பாகிஸ்தானில் பொதுமக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் தற்கொலைப் படைத் தீவிரவாதி நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதிக்குள் ஒளிந்திருந்த தீவிரவாதிகளை இராணுவம் சுட்டுக் கொன்றது. அப்போது முதல் அந்நாட்டில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
இன்று பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள பாணு நகரத்தின் சந்தைப் பகுதியில் ஆட்டோவில் வந்த தற்கொலைப்படைத் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.
இறந்தவர்களில் 4 பேர் காவலர்கள் என்றும், காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் இராணுவச் செய்தித் தொடர்பாளர் வகீத் அரஷத் கூறியுள்ளார்.
பொதுமக்கள் அதிகமாகக் கூடியிருந்த இடத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறை வேன் அருகில் தீவிரவாதியின் ஆட்டோ வந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் அந்த ஆட்டோவை காவலர்கள் தடுக்க முயன்றபோது அது வெடித்துள்ளது என்று உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ஜாவெத் இக்பால் சீமா கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்தியது ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை. அதேபோல பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.