சிறிலங்காவின் மன்னார் பகுதியில் நடைபெற்ற போரில் ஒரு அதிகாரி உட்பட 7 சிறிலங்கா இராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் 54 பேர் படுகாயமடைந்தனர் என்றும் கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" வார இதழ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து "த நேசன்" வார இதழில் வெளியாகியுள்ள செய்தியின் தமிழ் வடிவம் :
யாழ். நாகர்கோவில்- முகமாலை- கிளாலி அச்சில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில் இரு சிறிலங்கா இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இப்போதைய சிறிலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கைகளால் வன்னியில் உள்ள 6,500 சதுர கி.மீ. பரப்பிற்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பலம் 3,000 உறுப்பினர்களாகும். அதில் யாழ். குடாவில் நிறுத்தப்பட்டுள்ள 1,800 விடுதலைப் புலிகளும் அடக்கம். மேலும் 1,200 கடற்புலிகளும் உள்ளனர்.
தம்பனைப் பகுதியில் விடுதலைப் புலிகள் கடந்த சனிக்கிழமை (22.09.07) மேற்கொண்ட பீரங்கித் தாக்குதல்களில் இராணுவ அதிகாரி அலகியவன்னாவும் 3 வீரர்களும் கொல்லப்பட்டனர். மேலும் 32 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே கடந்த திங்கட்கிழமை மற்றுமொரு நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மன்னாரில் உள்ள கட்டுக்கரைக்குளம் மீதான அந்த நடவடிக்கையில் இராணுவத்தினர் தீவிரமாக பங்கேற்றனர். அந்தப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் பதுங்குகுழிகளை கைப்பற்றுவது தான் சிறிலங்கா இராணுவத்தினரின் திட்டம்.
இந்த நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தின் மீது கடுமையான எதிர்த்தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். இதில் 3 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 22 பேர் காயமடைந்தனர். கமாண்டோப் படைப்பிரிவின் அதிகாரியான துசாரா வெற்றசிங்க படுகாயமடைந்தார்.
சிறிலங்கா இராணுவத்தினர் சிறு குழுக்களாகவே தமது நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் காடுகளுக்குள் ஊடுருவி வருகின்றனர்.