அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ள பாகிஸ்தான் அதிபர் தேர்தலில், இப்போதைய அதிபர் முஷாரஃப் மீண்டும் போட்டியிடுவதை எதிர்த்து வழக்கறிஞர்களும், எதிர்க்கட்சித் தொண்டர்களும் நடத்திய போராட்டம் கலவரத்தில் முடிந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தடியடி நடத்திக் கலைத்தனர்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப், இராணுவத் தளபதி பதிவியில் இருந்துகொண்டே தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்றுத் தள்ளுபடி செய்தது.
இதனால் முஷாரஃப் தேர்தலில் போட்டியிடுவதற்கு இருந்த தடைநீங்கியது. எனவே அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சிகள் போராட்டத்தைத் தொடங்கின. அவர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும் களத்தில் இறங்கினர்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிரில் நேற்றுத் தொடங்கிய போராட்டம் இன்றும் தொடர்ந்தது.
இன்று உச்சநீதிமன்றம் அருகில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற 200 வழக்கறிஞர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். கூட்டத்தைக் கலைக்கக் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.
கருப்பு உடைகளை அணிந்த வழக்கறிஞர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசித் தாக்கினர். இந்த மோதலில் 2 வழக்கறிஞர்களும் 12 காவலர்களும் காயமடைந்தனர்.
''போராட்டம் அமைதியாகத்தான் நடந்தது. ஆனால் காவல்துறையினர் பெண் வழக்கறிஞர்களைத் தாக்கினர். அப்போது காவலர்கள் அடிபடுவதை இரசித்தபடி கேலிசெய்து சிரித்தனர்.'' என்று காயமடைந்த மனித உரிமைகள் இயக்க நிருவாகி அஷ்மா ஜஹாங்கீர் தெரிவித்தார்.
புகைப்படக்காரர்கள், செய்தியாளர்களின் மீதும் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
போராட்டத்தை முன்னிட்டு இசுலாமாபாத் நகரஎல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இதேபோல கராச்சி, லாகூரில் நடைபெற்ற போராட்டங்களிலும் காவல் துறையுடன் மோதல் நடைபெற்றது என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக அதிபர் முஷாரஃப்பின் பெயரைப் பிரதமர் சவ்கத் அஜிஸ் வழிமொழிந்துள்ளார். முஷாரஃப்பின் வேட்பு மனுவையும் அவரே சென்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 43 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதன் இறுதிப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளது.
இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகாமல் முஷாரஃப் தேர்தலில் போட்டியிட்டால், நாடாளுமன்றத்தில் இருந்து மொத்தமாகப் பதவி விலகுவோம் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.