இராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சு நடத்த ஐ.நா. சிறப்புத் தூதர் குழு வரவுள்ள நிலையிலும் மியான்மரில் பதற்றம் நீடித்து வருகிறது.
கடந்த 45 ஆண்டுகளாக ஆட்சி நடத்திவரும் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக மியான்மரில் நடந்துவரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் யாங்கூனில் நடைபெற்ற போராட்டத்தில் ஜப்பான் நாட்டுப் புகைப்படக்காரர் ஒருவர் உட்படப் பத்திற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இரவு நேரங்களில் பொது இடங்களில் கூடுவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
யாங்கூன் நகரம் முழுவதும் படைவீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் சர்வதேச எதிர்ப்பையும் மீறி தகவல் தொடர்புகளை இராணுவ ஆட்சியாளர்கள் துண்டித்தனர்.
மியான்மரில் இராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சு நடத்துவதற்காக நைஜீரியாவைச் சேர்ந்த ஐ.நா.சிறப்புத் தூதர் இப்ராகிம் கம்பாரி தலைமையிலான குழுவினர் வருகின்றனர்.
அமெரிக்கா உள்ள நாடுகள் மியான்மர் வன்முறையை காட்டுமிராண்டித்தனம் என்று விமர்சித்துள்ளன. இந்நிலையில் மியான்மரில் பதற்றம் நீடித்துவருகிறது. கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.