ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் படைவீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது இராணுவ உடையில் இருந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் படைவீரர்களும், இராணுவ அதிகாரிகளும் காபூலில் இருந்து பேருந்து ஒன்றில் இன்று காலை புறப்பட்டனர்.
அப்பேருந்தை இராணுவ உடையில் நெருங்கிய தற்கொலைப்படை தீவிரவாதி தன்னிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
தாக்குதலில் இறந்தவர்கள் பலர் படைவீரர்களும், பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றும் வீரர்களும் ஆவர். சுற்றியிருந்த பொதுமக்களும் இதில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
"31 பேர் இறந்துள்ளனர், 17 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். அனைவரும் படைவீரர்கள்." என்று நலத்துறை அமைச்சர் முகமது அமீன் பாத்தெமி கூறியுள்ளார்.
இத்தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் ஒன்று பொறுப்பு ஏற்றுள்ளது. இதேபோலக் கடந்த ஜுன் பொதுமக்கள் நிறைந்த பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.