அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இந்தியா தயாரான பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்து.
அதுவரை ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
"இந்தியா தனது அரசியல் சிக்கல்களைத் தீர்த்துத் தயாராகும்வரை நாங்கள் காத்திருப்போம்" என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சர் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிராணாப் முகர்ஜியும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீசா ரைசும் சந்தித்துப் பேசியபோது அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய விவாதம் எழுந்தது என்று பெளச்சர் தெரிவித்தார்.
"இந்திய அரசியல் அமைப்பை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மன்மோகன்சிங் அரசு விளக்கம் அளிக்கும் வரை நாங்கள் காத்திருக்கிறோம்.
அணுசக்தி ஒப்பந்தத்தைநடைமுறைப்படுத்துவதில் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்று நாங்கள் பேசியுள்ளோம். சர்வதேச அணுசக்தி முகமையிடம் இந்தியா சென்றுள்ளதைப் போல நாங்களும் செல்வோம். பின்னர் இருதரப்பும் இணைந்து அணு எரிபோருள் வழங்கும் நாடுகள் குழுவிடம் செல்வோம்" என்று அவர் கூறியுள்ளார்.