இலங்கை இராணுவத்தின் விமானப்படை இன்று காலை நடத்திய தாக்குதலில், விடுதலைப்புலிகளின் ஒரு பிரிவான கடற்புலிகளின் பயிற்சிதளம் அழிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள புதுக்குடியிருப்பு, தேவிபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 8.10 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலில் கடற்புலிகளின் பயிற்சி மையம் அழிக்கப்பட்டது என்றும், திரிகோணமலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இத்தாக்குதல் தொடர்பாக விடுதலைப் புலிகளின் தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
கிழக்குத் துறைமுகப் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இராணுவக் கடற்படை நடத்திய தாக்குதலில் கடற்புலிகளின் 3 படகுகள் சேதமடைந்தன. 18 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து விடுதலைப் புலிகளுக்கும், அரசிற்கும் இடையில் நடைபெற்று வந்த பேச்சுக்களில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்நிலையில் இந்தப் புதிய தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.