பாதுகாப்பற்ற பகுதிகளில் மக்களை குடியமர்த்துவதை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று உள்ளுரில் இடம்பெயர்ந்தோர் கண்காணிப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இடம்பெயர்ந்தோர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா இராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து ஏறத்தாழ ஐந்து லட்சம் மக்கள் சிறிலங்காவில் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். போரில் ஈடுபடுபவர்கள் மக்களின் உரிமைகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை.
இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பற்ற இடங்களில் பலவந்தமாக மீண்டும் குடியமர்த்தப்படுகின்றனர். இதில் அவர்களின் முடிவுகள் கருத்தில் எடுக்கப்படுவதில்லை. மக்களை குடியேற்றுவதில் அரசு திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
மக்களின் சுயவிருப்புடன், பாதுகாப்பாக குடியமர்த்தப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று நார்வேயின் அகதிகளுக்கான சபையின் செயலாளர் நாயகம் தோமஸ் சி ஆர்ச்சர் தெரிவித்திருந்தார். 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 3,00,000 மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனர்.
ஆசியாவில் அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வது சிறிலங்காவில்தான். போரினால் இடம்பெயர்ந்த 4,60,000 மக்கள் ஆழிப்பேரலையின் போது மீண்டும் இடம்பெயர்ந்து தற்போதும் முகாம்களில் உள்ளனர்.
இதில் சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் குடியமர்த்தப்பட்ட மக்களில் பலர் இப்போதும் மோதல்களின் அச்சத்திலும், ஆயுதக்குழுக்களின் அச்சத்திலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் விவசாய நிலங்கள், மீன்பிடிக்கும் பகுதிகள் ஆகியன பெருமளவில் இராணுவத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தமது வாழ்க்கைக்கான வசதிகளை பெறுவதற்கு மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி உள்ளனர்.
மோதல்களின் போது சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து செயற்படும் கருணா குழுவினர் மற்றும் விடுதலைப் புலிகள் போன்றோர் சர்வதேச மனிதாபிமான விதிகளை மீறி வருகின்றனர். மக்களை அவர்கள் மனித கேடயங்களாக பயன்படுத்துவதுடன், படுகொலைகள், கடத்தல்கள் போன்றவற்றையும் மேற்கொண்டு வருகின்றனர். மனிதாபிமான அமைப்புக்களின் பணியாளர்களும் குறி வைக்கப்படுகின்றனர். மனிதாபிமான பணியாளர்கள் பணியாற்றுவதற்கு அனைத்துத் தரப்பினரும் அனுமதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.