மியான்மரில் நடைபெற்றுவரும் கலவரங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். மியான்மர் மக்களுக்கு ஆதரவளிக்கும் பொறுப்பு, நாகரிகமுள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் மியான்மரில் சூழ்நிலையை ஆய்வு செய்வதற்காக ஐ.நா. தூதுக்குழு விரைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் புஷ் வாஷிங்டனில் விடுத்துள்ள அறிக்கையில், "தங்கள் விடுதலைக்காக வீதியில் இறங்கிப் போராடிவரும் மியான்மர் மக்களை உலகம் பார்த்துக் கொண்டுதான் உள்ளது. அந்த வீரர்களுடன் அமெரிக்க மக்கள் இணைந்து நிற்பார்கள். ஜனநாயகம் வேண்டி அமைதியான முறையில் போராடும் மக்கள் மீதும், துறவிகள் மீதும் நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.
மேலும், "மியான்மரில் பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருபவர்களைப் போன்ற, கொடுமையான இராணுவ ஆட்சியாளர்களிடம் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பொறுப்பு, நாகரிகமடைந்த ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ளது.
மியான்மருடன் தொடர்புடைய எல்லா நாடுகளும் மியான்மர் மக்களுக்கு ஆதரவாக ஒன்றுபடும்படி நான் அழைக்கிறேன்.
மாற்றத்தை விரும்பும் எண்ணத்தை அமைதியான முறையில் வெளிப்படுத்திவரும் தங்கள் சொந்த மக்களின் மீது, படைகளைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தும்படி மியான்மரின் இராணுவ ஆட்சியாளர்களை வலியுறுத்த வேண்டும்.
ஆட்சியாளர்களின் கணக்குப்படி பார்த்தால் கூட, வன்முறையின்றிப் போராடிய 9 பேரைக் கொன்றுள்ளனர். ஏராளமானவர்களைக் காயப்படுத்தியுள்ளனர். அமைதியாகத் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தங்களுக்குக் கீழ் உள்ள அப்பாவிக் குடிமக்களின் மீது தங்களின் பலத்தைப் பயன்படுத்துவதை மியான்மர் இராணுவத்தினரும், காவல் துறையினரும் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளின் மதிப்பை உணர்ந்தவர்கள், மியான்மர் மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்" என்று அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
"சர்வதேச விவகாரங்களுக்கான ஐ.நா தூதுக்குழு மியான்மர் செல்கிறது. அவர்கள் நாளை மியான்மரை அடைவார்கள். அக்குழுவில் உள்ள தூதர் கம்பாரியின் கருத்துக்களுக்கு ஏற்றவாறு நாங்கள் செயல்படுவோம்" என்று புஷ்ஷின் செயலர் டானா பெரினோ கூறியுள்ளார்.