சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கவலை தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பு, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறப்புக் கவனம் செலுத்தப்படும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு மற்றும் விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள் கவலை தருவதாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் 6 ஆவது கூட்டத்தொடரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நாடான போர்ச்சுக்கல், ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான் ஆகியவை தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையர் லூயிஸ் ஹார்பர், சிறிலங்கா செல்வதன் மூலம் ஏற்படும் பயன்களைத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா அரசானது, மோதல்களுக்கு அமைதி வழியில் அனைத்துக் கட்சி குழுவினுடன் இணைந்து தீர்வுகாண வேண்டும் என்றும், சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை மகிந்த அரசு நிறுத்த வேண்டும் என்றும் ஜெர்மனி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், கருணா குழுவினரும், விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். சிறிலங்கா அரசின் விசாரணைக் குழுவில் பல குறைகள் உள்ளதாக அதனைக் கண்காணித்து வரும் சர்வதேச வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. எனவே இந்த குறைகள் நீக்கப்பட்டு, விசாரணை ஆணைக்குழு உரிய காலத்தில் தனது பணியை நிறைவு செய்ய வேண்டும். அங்கு பணியாற்றும் மனிதாபிமான பணியாளர்களின் பாதுகாப்பை சிறிலங்கா அரசு உறுதிப்படுத்துவதுடன், அவர்களின் பணிபுரிவதற்கான ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்றும் ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தினர், மனித உரிமை மீறல்களில் அதிகளவில் ஈடுபடுவது கவலை தருகின்றது. கருணா குழுவினர், விடுதலைப் புலிகள் ஆகியோரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மனிதாபிமானப் பணியாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்றது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று போர்ச்சுகல் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
எல்லாத் தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை விதிகளை மதிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம், மனித உரிமை ஆணையாளர் ஆர்பரின் பயணத்தை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் என்று இங்கிலாந்து கூறியுள்ளது.