பாகிஸ்தானில் அக்டோபர் 6ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி தற்போதைய அதிபர் பர்வேஷ் முஷாரஃப் சார்பில் பிரதமர் செளகத் அஜிஸ் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
சட்டப்படி முஷாரஃப் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முஷாரஃப்பின் பெயரை பிரதமர் செளகத் அஜிஸ், காஜி குலாப் ஜமால் என்பவரும் முன்மொழிந்துள்ளனர்.
''இந்த நாள் பாகிஸ்தான் வரலாற்றில் முக்கியமான நாள். நாட்டில் ஜனநாயகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நாள். அதிபர் பர்வேஸ் முஷாரஃப் வெற்றி பெறுவார் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்'' என்று தேர்தல் ஆணையத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தபிறகு செளகத் அஜிஸ் கூறியுள்ளார்.
''நாங்கள் வெளிப்படையாக, சுதந்திரமாக, முறைகேடுகள் அற்றவாறு தேர்தல்களை நடத்துவோம். பாகிஸ்தான் மக்கள் தங்களின் எதிர்காலத் தலைமையைச் சுதந்திரமாகத் தேர்வு செய்யலாம்'' என்று அவர் உறுதியளித்தார்.
அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது பாகிஸ்தானிற்கு மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டுவரும் என்று செளகத் அஜிஸ் தெரிவித்தார்.
அதிபர் தேர்தலுக்கான முதன்மைத் தேர்தல் அதிகாரியாக நாடாளுமன்றத் தலைவர் வாசிம் சாஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் வேட்பாளர் நீதிபதி வாஜிஹூதீன் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வேட்பாளர் மஹ்தூம் ஃபாகிம் அமின் ஆகியோரும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.