பாகிஸ்தான் அதிபர் தேர்தல் முறைகேடுகள் இன்றி நடப்பதை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற வருகின்றன என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வாக்குப் பதிவு நாளன்று அமைதியைக் காக்கும் வகையில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி 4 மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ஜாவத் இக்பால் சீமா தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் எந்தவிதமான தீவிரவாத அச்சுறுத்தல்களும் எழ வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலை நடத்தவிட மாட்டோம் என்று எதிர்க்கட்சியினர் மிரட்டியுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, பொது அமைதியைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசைத் தேர்தல் ஆணையம் வற்புறுத்தியுள்ளது.
அதிபர் பர்வேஸ முஷாரஃப் இரண்டு பதவிகளை ஒன்றாக வகித்துவருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு வருகின்ற நாட்களிலும், தேர்தல் காலங்களிலும் அமைதியைக் காப்பதற்காக அரசியல்வாதிகள் உள்படப் பலர் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சீமா கூறியுள்ளார்.