மியான்மரில் அரசிற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் இராணுவ ஆட்சியாளர்கள் இரவு நேர ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுபவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்படுகின்றனர். சாலைகளில் இராணுவ வீரர்களும் காவல்துறையினரும் பாதுகாப்பிற்காகச் சுற்றி வருகின்றனர்.
போராட்டங்களை நடத்திவரும் புத்தமதத் துறவிகளுக்கு உணவு மற்றும் தேவையான பொருட்களை வழங்கிய குற்றத்திற்காக நகைச்சுவை நடிகர் ஜர்கானாவும், கவிஞர் கியூ துவும் இன்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட நாட்களாக ஈடுபட்டுவருகின்றனர்.கைது செய்யப்பட்டவர்களின் நிலைகுறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை.
முன்னதாக யான்கூன் நகரில் 1,00,000 பேர் கலந்து கொண்ட மிகப்பெரிய பேரணியை புத்த மதத் துறவிகள் நடத்தினர்.
அவர்கள் தங்கள் போராட்டங்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இராணுவ ஆட்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இருந்தாலும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எதையும் இராணுவம் எடுக்கவில்லை.