ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க அணு சக்தியைப் பயன்படுத்துகிறது என்று எழுந்த சர்ச்சை முடிந்துவிட்டது என்றும், இந்த விவாகாரம் ஐ.நாவின் கீழ் இயங்கும் சர்வதேச அணு சக்தி முகமையின் கைகளில் கொடுக்கப்பட்டு விட்டது என்றும் அந்நாட்டு அதிபர் முகமது அகமதினேஜாத் கூறியுள்ளார்.
ஐ.நா பொது அவையில் நேற்றுப் பேசிய அவர் "எங்களின் அணு சக்திப் பயன்பாடுகள் அனைத்தும் அமைதியானவை, வெளிப்படையானவை" என்றார். அணு சக்தி விவாகாரத்தில் ஈரானுக்கு உள்ள உரிமைகளைப் பறிக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்கின்றன என்றும் அவர் குற்றம்சாற்றினார்.
"இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் சட்டவிரோதத் தடைகளுக்கு இடையில், ஈரான் ஒவ்வொரு படியாக முன்னேறி வருகிறது. இப்போது எங்கள் நாடு அணு உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருளை மறு சுழற்சி செய்து ஆக்கபூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்தத் தகுதியுள்ள நாடு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது."
"இந்நிலையில் ஈரானின் அணு சக்தி விவகாரங்களைஅரசியலாக்க மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கின்றன. ஆனால், இன்று ஈரானின் பாதுகாப்புக் கருதி அணுசக்தி விவகாரம் சர்வதேச அணு சக்தி முகமையிடம் சென்றுள்ளது. ஈரானின் அணுசக்தி சர்ச்சை இத்துடன் முடிந்து விட்டது என்று நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். அந்தச் சர்ச்சை இப்போது ஒரு சாதாரண நடைமுறை விடயமாக மாறிவிட்டது" என்று அகமதினேஜாத் தெரிவித்துள்ளார்.
"எப்போதும் எல்லாத் தரப்பினருடனும் முறையான பேச்சு நடத்த ஈரான் தயாராகவே உள்ளது" என்றும் அவர் கூறினார்.