நாசிசம் இறந்துவிடவில்லை. சிறிலங்காவில் அது தத்துவ ரீதியாக உயிர் வாழ்ந்து வருகிறது என்று அமெரிக்காவின் "தி என்குயரர்" பத்திரிகையின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (18.09.07) வெளிவந்த தலையங்கத்திற்காக, அமெரிக்காவில் வாழும் அகிலன் சிவகணேசன் எழுதியதன் தமிழ் வடிவம் :
நாசிசம் அல்லது இனப்பாகுபாடு இறந்து விட்டது என நீங்கள் கருதினால் நீங்கள் இதனைப் படிக்க வேண்டும். அண்மையில் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பிலிருந்து 500 தமிழ் மக்கள் பலவந்தமாக காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 300 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலைநகரில் வாழ்ந்தவர்கள் அல்லது மருத்துவ சிகிச்சை போன்ற பல காரணங்களுக்காக அங்கு சென்றவர்கள்.
சிறுபான்மை தமிழ் இன மக்கள் தகுந்த காரணம் இன்றி தலைநகரத்தில் தங்க முடியாது என்பது தான் காவல்துறையினர் இதற்கு கொடுக்கும் விளக்கம்.
"சிறிலங்கா காவல்துறையினர் நாங்கள் கூறியதைக் கேட்கவில்லை. அவர்கள் எங்களைத் தாக்க முயன்றனர், எங்களைக் கடுமையாக திட்டியதுடன் வாகனங்களுக்குள் எங்களைத் தள்ளினார்கள் என தனக்கு நேர்ந்த அவலம் தொடர்பாக 54 வயதான பெண் ஒருவர் தெரிவித்தார். "அவர்கள் எங்களை உடுத்திருந்த உடையுடன் அந்த இடத்தை விட்டு அகற்றினர். எங்களால் உடைகளைக்கூட எடுத்துச் செல்ல முடியவில்லை" என்றார் ஒருவர்.
பெயரளவில் நாசிசம் இறந்து போய் இருக்காலம், தத்துவரீதியாக அது சிறிலங்காவில் நன்றாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை ஜெர்மனில் இருந்த யூதர்களுக்கும், ஆப்பிரிக்காவில் வாழ்ந்த கறுப்பின மக்களுக்கும் நிகழந்த கொடுமைகளுடன் ஒப்பிடும் போது, நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கூட அதை ஏற்றுக்கொண்டார்.
இந்த வெளியேற்றத்தை நார்வே, அமெரிக்கா போன்ற நாடுகள் கண்டித்தன, பல அரசு சார்பற்ற நிறுவனங்கள் இதனை மனிதாபிமானமற்ற செயல் எனவும் கூறியிருந்தன. தமிழ் மக்களை வெளியேற்றியது அரசின் வழக்கமான நடவடிக்கையில் ஒன்றாக இருந்த போதும், நாம் எல்லாரும் சேர்ந்து கூட்டாக கண்டனங்களை வெளியிடுவதுடன் சிறிலங்காவை மறந்து விடுகிறோம்.
ஆனால் இது பல சகாப்தங்களாக நடைபெற்று வரும் அரச பயங்கரவாதம் மற்றும் இனப்படுகொலைகளின் மற்றொரு வடிவம் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும். சிறிலங்கா தொடர்பாக நீங்கள் அதிக கவனம் செலுத்தா விட்டால் பின்வரும் தகவலைப் படிக்கவும்.
அமெரிக்கா 60 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உதவிகளை சிறிலங்கா இராணுவத்துக்கு வழங்கியுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடும் போது, சிறிலங்கா எத்தகைய இராணுவத்தைக் கொண்டுள்ளது? அது ஒழுங்கான இராணுவம் அல்ல. ஊடகவியலாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறிலங்கா இராணுவத்தினர் கொலை செய்து வருவதாக மீண்டும், மீண்டும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
சிறிலங்கா விமானப் படையினர் பாடசாலைகள், தேவாலயங்கள், இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்கள், பாராமரிப்பு நிலையங்கள் போன்றவற்றின் மீது குண்டு வீசி வருகின்றனர்.
போரினால் இடம்பெயர்ந்த பல நூறு ஆயிரம் மக்களுக்கான உணவு மற்றும் மருந்து பொருட்களின் விநியோகத்தை சிறிலங்கா இராணுவத்தினர் தடுத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினர் அரசு சார்பற்ற தொண்டு நிறுவன பணியாளர்கள் 17 பேரை படுகொலை செய்தனர். அவர்களை வரிசையாக நிற்கவைத்து அருகில் இருந்து இராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.
கடுமையான உழைப்பின் மூலம் நாம் செலுத்தும் வரிப்பணம் நமது நாட்டை மேம்படுத்துவதற்கு உதவவேண்டும் என்பதே எனது விருப்பம்.
பெருமளவில் படுகொலைகளில் ஈடுபடும் இராணுவத்தின் பணப்பெட்டிகளை அது நிரப்பக்கூடாது. குறிப்பாக நமது சொந்த இராணுவத்தினர் ஈராக், ஆப்கானிஸ்த்தான் போன்ற நாடுகளில் ஒரு இக்கட்டான நிலையில் உள்ள போது நாம் ஏன் சிறிலங்காவிற்கு நமது நிதியை வழங்க வேண்டும்.
இந்து மகாக் கடலில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் சீற்றத்தை நாம் மறந்துவிட முடியாது. அதில் பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வாறு இருக்கின்றனர்? பலர் இப்போதும் தற்காலிக முகாம்களில் தான் வாழ்கின்றனர். ஆனால் பொதுமக்களை படுகொலை செய்யும் இராணுவத்திற்கு இலவசமாக நிதி வழங்கப்படுகின்றது. எனது வரிப்பணம் அரசியல் விளம்பரத்திற்குச் செலவிடப்படுவதை நான் விரும்பவில்லை.
நாஜிக்களின் முறையில் தமிழ் மக்களை பெருமளவில் சிறிலங்கா அரசு வெளியேற்றியது நீண்டகால இன அழிப்பின் ஒரு பகுதி. நாம் அதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
சிறிலங்கா இராணுவத்தினருக்கு எங்கள் அரசு நிதி வழங்குவதையும், செயல்திறன் அற்று இருப்பதையும் நடுநிலமை என கொள்ளமுடியாது, மாறாக சிறிலங்காவின் குற்றங்களில் அது பங்கெடுப்பதாகவே அதைக் கொள்ள முடியும்.