சர்வதேச நாடுகள் இரட்டைப் போக்குடன் செயல்படுகின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சா குற்றம் சாற்றியுள்ளார்.
ஐ.நா. மாநாட்டில் மகிந்த ராஜபக்சா ஆற்றிய உரையின் முக்கிய விவரம் வருமாறு :
பல நாடுகள் இணைந்த ஒரு கூட்டமைப்பின் கீழ், அந்தந்த நாடுகளின் பிரச்சினைகளை, சரியான வகையில் தீர்ப்பது தொடர்பாக ஆராய்வதற்கும் இணைந்து செயறல்படுவதற்குமே ஐ.நா. சபை உருவாக்கப்பட்டு அதில் நாம் உறுப்பினர்களாக இருக்கிறோம்.
இருப்பினும், இந்த கட்டுக்கோப்புக்குள் நிற்கத் தவறும் சில நாடுகளை, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிக்கும் சூழ்நிலையே இங்கு நிலவுகிறது. ஒன்றிணைந்து தீர்வைத் தேடுவதற்குப் பதிலாக, இங்கு உறுப்பினர்களாக உள்ள பல நாடுகள், ஒன்றுக்கொன்று சந்தேகப்படுவதும், தங்களுக்கு இடையில் சுவர்களைக் கட்டியெழுப்பி எதிர்த்திசையில் நிற்பதையும் பார்க்க முடிகிறது.
மிகவும் பழைமை வாய்ந்த, முன்னேற்றமுடைய பண்டைய நாகரீகத்தைக் கொண்ட நாடு சிறிலங்கா என்பதில் பெருமையடைகிறோம். கிரேக்க, ரோம நாகரீகங்களையும் நைல் நதியைச் சார்ந்த பழமை வாய்ந்த நாகரீகத்தையும் ஒத்த சிறிலங்காவில், மிகவும் குறிப்பிடத்தக்க விசயமாக, மிகப் பழமை வாய்ந்த, இன்றும் பேசப்படுகின்ற இரு மொழிகளான சிங்களம் , தமிழ் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
நாட்டின் வடக்கில் மிக மோசமான எதிர்ப்புக்களுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணமான பயங்கரவாதக் குழுவிடமிருந்து, கிழக்கை மீட்டுள்ளோம். அங்கு சட்டத்தையும ஒழுங்கையும் வேகமாகக் கொண்டு வந்துள்ளோம்.
கிழக்கில் மீள்கட்டுமானப் பணிகளை ஏற்கனவே முன்னெடுத்துள்ளதுடன், நாட்டின் முதன்மை மிக்க மீளமைப்பு மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கான முன்னுதாரணமான பகுதியாக கிழக்கை அறிவித்துள்ளோம்.
அடுத்த வருடத்தில் அப்பகுதியில் மாகாண மற்றும் நகராட்சித் தேர்தல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கிழக்கில் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச நாடுகளுக்கு நிறைய வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இராணுவ வெற்றியொன்றைப் பெறுவதற்கு பயங்கரவாதிகளுக்கு வாய்ப்பில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் அழுத்தம் கொடுப்பதற்காகவே நாம் இராணுவத் தாக்குதல்களைத் தொடுத்தோம். இருப்பினும், துரதிர்ஷ்டவசமான இந்தப் பிரச்சினைக்கு, பேச்சின் மூலமான கௌரவமான தீர்வைக் காண்பதே எங்களின் இலட்சியமாக இருக்கிறது. இதற்காகவே, அனைத்து கட்சிக்குழுவினரும் வெற்றியுடன் செயற்பட்டு வருகின்றனர்.
25 வருடகால மோசமான பயங்கரவாதத் தாக்குதல்கள் பிரச்சினைகளுக்கு மத்தியிலும், சிறிலங்கா வேகமான முன்னேற்றங்களை அடைந்துள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுடனும் அவர்களது திட்டங்களுடனும் இணைந்தே எங்கள் அரசு செயல்படுகிறது. சர்வதேச நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் எங்கள் நாட்டுக்கு வந்து செல்ல நாங்கள் அனுமதி வழங்குகிறோம்.
புத்த மதத்தின் உயர்ந்த தத்துவங்களின் அடிப்படையில் செயல்படும் எங்கள் நாடு, ஒவ்வொரு மனிதனின் தனி மனித உரிமையை மதித்து நடக்கிறது. சமய, பொருளாதார, பதவி கைப்பற்றல்களுக்காக, எந்தவொரு தனி மனிதனின் உரிமையையும் மதிக்கத் தவறியதாகவோ, யாருடைய உயிரையும் பறித்ததாகவோ எங்கள் நாட்டுக்கு வரலாறு இல்லை.
இதேவேளை, எந்தவொரு நாடும், தனது அரசியல் ஆதாயங்களுக்காக, பிறிதொரு நாட்டின் மனித உரிமை குறித்த விசயங்களை கருவியாகப் பாவிக்கக் கூடாது. மனித உரிமை மதிக்கப்பட வேண்டுமென்பதுடன், அதை சர்வதேச நாடுகள் தங்களின் அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்த முயற்சிக்கக் கூடாது.
பயங்கரவாதத்தால் பல நாடுகள் பாதிப்படைந்துள்ளன. மோசமான பயங்கரவாதத்தால் ஏற்கனவே பாதிப்படைந்த பல நாடுகளின் பிரதிநிதிகளும் இங்கே உள்ளனர். நியூயார்க், மும்பை, கெய்ரோ, லண்டன், கொழும்பு என்று எங்கு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றாலும், அதில் அப்பாவிப் பொதுமக்களே கொல்லப்படுகிறார்கள். பயங்கரவாதம் எங்கு நடந்தாலும் அது பயங்கரவாதம் தான். பயங்கரவாதத்தில் நல்லது என்று எதுவும் இல்லை.
உலகின் எந்தப் பாகத்தில் நடக்கும் பிரச்சனைகளும், உலக பொருளாதாரத்தைப் பாதிக்கும். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் இனப் பிரச்சனைகள் உலக பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் பிரச்சினைகளை, அந்தந்த நாட்டின் சூழ்நிலைக்கேற்ப தீர்ப்பதற்கு முயற்சிப்பது அவசியம். அல்லது அந்த நாட்டு மக்கள், தீர்வில் திருப்திகொள்ள வாய்ப்பில்லை. இது ஜனநாயகத்திற்கும் ஒரு சவாலாக அமைந்துவிடும்.
பாலஸ்தீனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்படுவது அவசியம். தனக்கென ஒரு தனியான சுதந்திர நாட்டை உருவாக்க நீண்டகாலமாக முயற்சியெடுத்து வரும் அவர்களுக்கு சர்வதேச நாடுகள் உதவவேண்டும்.
தவறான நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் நிதி சேகரிக்கும் விசயத்தைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுப்பதுடன், அதற்கான செலவுகளைக் கவனிக்க அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
"மகிந்த சிந்தனை" அடிப்படையில் எதிர்வரும் 10 ஆண்டுகளில் எங்கள் நாட்டை மீட்டெடுக்கும் திட்டத்தை வகுத்துள்ளோம். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கும் பகுதிகளை மீண்டும் சீரமைக்க முன்னுரிமை வழங்கப்படும்.. கிராம அளவிலும், தேசிய அளவிலும் பல வகையான வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டியுள்ளோம்.
இயற்கைச் சீற்றங்களாலும், சர்வதேசப் பங்குச் சந்தையின் உறுதித்தன்மை இன்மையாலும், எங்கள் நாடு கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. உலக எண்ணெய்ச் சந்தையின் விலையுயர்வும் எங்கள் நாட்டில் உணவுப் பொருள் விலையேற்றத்தை உருவாக்கியுள்ளது. இப்படி பாதிப்படைந்த நாடுகளுக்கு, சிறப்பு நிதியுதவி வழங்க, உலக வங்கியும் ஏனைய நிதி நிறுவனங்களும் தனிப்பட்ட புதிய நிதித் திட்டங்களை அறிமுகம் செய்து உதவ வேண்டும்.
பயங்கரவாதத்தை ஒழிக்கவும், ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பவும் நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று உறுதியெடுப்போம் என்றார் அவர்.