அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்க விடுதலைப் புலிகள் தயார் என்றால் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு அவர்களுடன் பேச்ச நாங்களும் தயாராக உள்ளோம் என்று சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது!
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் சிறிலங்கா பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபாய இராஜபக்சா, கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், விடுதலைப் புலிகள் பேசுவதற்கு முன்வந்தால் அவர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளார்.
அதிபர் மகிந்த இராஜபக்சாவின் தம்பியான கோத்தபாய இராஜபக்சா ''முடிவு விடுதலைப் புலிகளின் கையில் உள்ளது. அவர்கள் இந்த வாய்ப்பை மறுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
இன்று தொடங்கியுள்ள ஐ.நா.வின் 62வது வருடாந்திர மாநாட்டில் பேசுவதற்காக அதிபர் மகிந்த இராஜபக்சா நியூயார்க் சென்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிறிலங்காவில் நீண்டகாலமாக நடந்துவரும் இனச் சிக்கலிற்க்கு இராணுவ ரீதியில் தீர்வுகாண முடியாது என்றும், அமெரிக்கா, சிறிலங்காவின் நட்பு நாடு என்ற வகையில் தம்மால் முடிந்தவரை உதவுவதற்குத் தயாராகவுள்ளது என்றும் அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளேக் கொழும்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.
''சிறிலங்கா அரசு கடந்த சில மாதங்களில் முக்கிய வெற்றிகள் சிலவற்றை பெற்றுள்ளது. கிழக்கிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை வெளியேற்றியது, அண்மையில் ஆயுதங்களை ஏற்றிவந்த விடுதலைப் புலிகளின் கப்பல்களை மூழ்கடித்தது ஆகியன முக்கிய இராணுவ வெற்றிகளாகும். ஆனால், இந்த வெற்றிகள் இலங்கையின் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காணமுடியுமா என்று மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு சிறிலங்கா அரசாங்கத்தை தூண்டக்கூடாது. அது சாத்தியமில்லை'' என்று பிளேக் கூறியுள்ளார்.
திங்கட்கிழமை திரிகோணமலையில் பேசிய கோத்தபாய இராஜபக்சா, அரசியல் தீர்வு காண்பதற்கு முன்பு விடுதலைப் புலிகளின் படைகளை தோற்கடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் படைகளைத் தோற்கடிக்காமல் இலங்கையில் நீண்டகாலமாக நடந்துவரும் இனமோதலுக்கு அரசியல் தீர்வு காணமுடியாது என்று சிறிலங்காவின் இராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் நடைபெற்று வரும் சண்டைகள் காரணமாக கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 5000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.