ஜப்பானின் புதிய பிரதமராக ஆளும் கட்சியின் புதிய தலைவர் யாசூ ஃபுகுடா பதவியேற்று ஆட்சியமைக்கும் வகையில், தற்போதைய பிரதமர் சின்சோ அபெவும் அவரின் அமைச்சரவையும் இன்று பதவி விலகினர்.
ஜப்பான் பிரதமர் சின்சோ அபெயின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்ற கருத்து நிலவியதையடுத்து கடந்த 12 ஆம் தேதி, தான் பதவி விலகவிரும்புவதாக சின்சோ அபெ அறிவித்தார். இதையடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜப்பானின் ஆளும் கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக யாசூ ஃபுகுடா கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். பெரும்பான்மையான ஆதரவு உள்ள காரணத்தால் இவர் புதிய பிரமராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி ஃபுகுடா விரைவில் பதிவியேற்கவுள்ளார். எனவே சின்சோ அபெயும் அவரின் அமைச்சரவையும் பதவிவிலகினர். அவர்களுக்குக் கட்சித் தலைமையின் சார்பில் வழியனுப்புவிழா நடைபெற்றது.
"எனது கடமைகளைச் சரிவர செய்யமுடியாத காரணத்தால் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கோள்கிறேன்" என்று சின்சோ அபெ கூறியுள்ளார்.