வன்முறையால் பாதிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கு குடியுரிமை பெற உதவும் வகையில் புதிய குடியுரிமைச் சட்டத்தை சிறிலங்கா அரசு செயல்படுத்தவுள்ளது.
இந்தியாவில் உள்ள அகதிகள் சிறிலங்கக் குடியுரிமை பெற உதவி செய்யும் வகையிலான சட்ட மசோதாவை அமைச்சரவை முன்பு பிரதமர் ரத்னசிறீ விக்கிரம நாயகே சமர்ப்பித்தார் என்று கொழும்பு நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சரவையின் முடிவை அறிவித்த அமைச்சர் அனுரா பிரியதர்சனா, நாட்டை விட்டு வெளியேறி வாழும் இந்த மக்கள் சட்டப்படி சிறிலங்கக் குடியுரிமை உடையவர்களாகக் கருதப்படுவதில்லை என்று தெரிவித்தார்.
இவ்வாறு இந்தியப் பகுதிகளில் உள்ள 28,500 இலங்கைத் தமிழர்கள் சிறிலங்கக் குடியுரிமையின்றி உள்ளனர். அவர்களில் பலர் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப நினைத்தாலும், குடியுரிமைச் சிக்கல் காரணமாக முறையான ஆவணங்களைப் பெற முடிவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.