புவியைக் காக்கும் படலமாக உள்ள ஓசோன் படலத்தைப் பாதிக்கும் வாயுக்கள் மற்றும் மாசுக்களை கட்டுப்படுத்தும் விசயத்தில் முன்பு திட்டமிட்டதைவிட வேகமாக செயல்படக்கூடிய வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த 200க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
புறஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்தும் வெப்பத்திலிருந்தும் ஓசோன்படலம் புவியைப் பாதுகாக்கிறது. இந்தப் படலத்தைப் பாதிக்கும் ரசாயனங்களை குறைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓசோனை பாதிக்கும் ஹைட்ரோ புளோரோ கார்பன்களை உள்ளடக்கிய பொருட்களை உற்பத்தி செய்வதை வளர்ந்த நாடுகள் 2020ஆம் ஆண்டிலிருந்து 2030ஆம் ஆண்டிற்குள்ளும், வளரும் நாடுகள் 2030ஆம் ஆண்டிலிருந்து 2040ஆம் ஆண்டிற்குள்ளும் கட்டுப்படுத்தி நிறுத்த வேண்டும் என்று ஐ.நா சுற்றுச்சூழல் இயக்கத்தில் உள்ள அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று ஐ.நா சுற்றுச் சூழல் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நிக் நட்டால் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் மான்ட்ரியலில் நடைபெறும் கூட்டத்தில் விரிவாகக் கூறப்படும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் எந்தத் தாமதமும் ஏற்படாது என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏர் கண்டிசனர்களில் பயன்படுத்தப்படும் ஹைட்ரோ புளோரோ கார்பன்கள் ஓசோன் படலத்தில் துளையை ஏற்படுத்துகின்றன. இதனால் மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடுமையான நோய்கள் ஏற்படுகின்றன.